Archive for the ‘புலவர்கள்’ Category

இளங்கோவடிகள்

இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதினார்.இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மகள் நற்சோனணக்கும் மகனாகத் தோன்றியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது.இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.

Advertisements

நக்கீரர்

இத்திருமுறையில் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார் எட்டு, போற்றித்திருக்கலி வெண்பா, திருமுருகாற்றுப் படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய பத்துப் பிரபந்தங்கள் நக்கீர தேவர் அருளியனவாக உள்ளன.

இப்பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்துள்ள திரு முருகாற்றுப்படை சங்க நூலாகிய பத்துப் பாட்டில் முதலாவதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது. கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும்.

ஏனைய பிரபந்தங்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற் றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமய குரவர்க்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் பெயர் தாங்கிய ஒருவரால் செய்யப் பெற்றனவாதல் வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பெயர் விளக்கம்

நக்கீரர் என்ற பெயரில் கீரன் என்பது இயற்பெயர். ந, சிறப்புப் பொருள்தரும் இடைச்சொல் . இப்பெயரை நல் கீரன் என்பதன் திரி பாகக் கொள்வாரும் உளர். பதினொன்றாம் திருமுறையில் சமயஞ் சார்ந்த அருளாளர் நிலையில் நக்கீரதேவ நாயனார் என இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் சான்று

நக்கீரதேவர் திருஈங்கோய்மலை எழுபது பாடிய காரணத்தால் அத்தலத்தில் தேவாரமூவர் திருவுருவங்களோடு நக்கீரர் திரு வுருவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கட்கு அபிடேகம் வழிபாடு செய்வித்தற்கு மூன்றாங் குலோத்துங்க சோழ மன்னன் நிலம் அளித்துள்ள செய்தி அங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. இவற்றைக் காணுங்கால் தேவார மூவர்க்குப்பின் வாழ்ந்த பெரும் புலவர் ஒருவர் நக்கீரர் பெயரோடு வாழ்ந்தார் எனவும், அப்புலவரே இந்நூல்களை இயற்றியுள்ளார் எனவும் கொள்வதில் தவறில்லை எனலாம். மேலும் சங்கப்புலவராகிய திருமுருகாற்றுப்படை ஆசிரியர் பெயர் நக்கீரர் என்று மட்டுமே உள்ளது. இந்நூல்களை அருளிய புலவர் பெயரோ நக்கீர தேவர் என்பதாலும் இருவரும் வேறு வேறானவர் எனக் கருதலாம்.

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 10, 1888 – ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இராமலிங்கனார் சேலம் மாவட்டம், மோகனூரில் அம்மணிம்மாள், வெங்கடராமன் ஆகியோருக்கு பிறந்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பட்டமும் `பத்மபுக்ஷன்’ பட்டமும் பெற்றவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லாமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கவிஞரின் நாட்டுப்பற்று

முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விதுதளைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.

’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’

என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

எழுதிய நூல்கள்

* மலைக்கள்ளன்
* என்கதை
* அவனும் அவளும்
* சங்கொலி

மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு

கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்து போற்றியது.

திருவள்ளுவர்

திருவள்ளுவர், பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்பொழுதைய சென்னை நகருக்கருகில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது.

திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். கன்னியாகுமரி கடல் முனையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவப்பட்டுள்ளது.